Tuesday, December 22, 2020

சாதிக்கு முடிவு கட்டுவோம்


தாழ்த்தப்பட்டோருக்கு அடையாளமாய்ப் போனது

உயர்த்திக் கொண்டோருக்கு பெருமையாய்ப் போனது

சமநிலை அடைய வேண்டிய சமூகம்

சாதியாய்ப் பிரிந்துநிற்கிறது

அவமானமே... அவசியமில்லாததை அவசரமாய்

உடுத்தியுள்ளோம் வெட்டிப்பெருமை பேசுவதற்கே

சாதி... சாதிக்க வேண்டியோருக்கு சபலமாய்ப் போனது


இப்போதெல்லாம் யாரய்யா சாதி பேசுகிறார்கள்

வீண்பேச்சு பேசுவோரே வேடிக்கையாய் இல்லையா?

இல்லை நீர் பேசுவதையே வாடிக்கையாய் கொண்டீரா!

திருமணப் பத்திரிக்கை முதல் திருவிழா அழைப்பிதழ்

வரை உங்கள் சாதியின் பெருமை பல்லிளிக்கிறது

மண்ணுக்கு எதுவும் பயனில்லாது போன உங்கள்

மரணத்தின் அறிவிப்பில் கூட சாதிப் பெருமையடைகிறது


நாதியற்றுக் கிடந்தோமா நாம் சாதி சொல்லி வாழ்வதற்கு

சாதிகளாய்ப் பிரிந்துள்ளோம் நம்மில் வீண் பெருமை கொண்டோரெல்லாம்

பெருமையே என்போரெல்லாம் கௌரவமாய் இட்டுக் கொள்வர்

சிறுமையே என்று அவதானித்தவரெல்லாம் மறைக்கவே முயற்சிப்பர்

சாதி ஒழிப்பை முன்னிருத்துவோர் சவால்களில் மூச்சடைப்பர்

என் செய்ய இந்த மானிடத்தை என்ற கவலையில் மரணிப்பர்

சாதிக்கும், அதன் பெருமைக்கும் தான் பாவம் முடிவில்லையோ!


இனியொரு விதி செய்வோம் ஆம்

அதையே நமது பொது விதியாகவும் செய்வோம்

சாதியைக் குறிப்பிடும் திருமணங்கள் 

பங்கேற்போர் யாருமின்றி வெறிச்சோடட்டும்

சாதிப் பெருமை பேசியே மரித்தோர் மரித்தே போகட்டும்

சாதிப் பெருமையை வரித்துக்கட்டும் திருவிழாக்கள் வீணாகட்டும்

மரண அறிவிப்பினில் சாதி விளம்புவோர் காணாமல் போகட்டும்


உங்கள் சாதிப்பெருமை பறைசாற்ற நாங்கள் ஏன்?

உரிமைக்குரலொன்று பட்டவர்த்தனமாய் எழும்பட்டும்

உறவோ, நட்போ இதில் இல்லாமல் போனாலும் கவலையில்லை

நாதியற்றுக் கிடக்க நாம் விலங்கினங்கள் அல்ல

மனிதர்கள் ஆம் மாமனிதராக வேண்டியவர்கள்

சாதி ஒழிப்பில் சாகசம் புரியும் தலைமுறை நமதாகட்டும்

பாகுபாடற்ற நாளைய நமது உலகம் புதிதாய் விடியட்டும்


முனைவர் செ. சேவியர்

பேச: 94439 22601

No comments:

Post a Comment